Header Ads

Breaking News

அரசுக்கு ஆதரவு வழங்கும் எம்.பியின் ஊரில் வைத்தியர் இல்லாத நிலை : பொத்துவில் மக்கள் போராட்டம்

-சியாத் அகமட்லெப்பை- 

விசேட வைத்திய நிபுணர்களை பெற்றுத் தருமாறு கோரி பொத்துவிலில் கவனயீர்ப்பு போராட்டாம் ஒன்று நேற்று (27) இடம் பெற்றது.

அம்பாரை மாவட்டம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் பௌதீக வளங்கள் மற்றும் ஆளணி வளங்களை நிவர்த்தி செய்து பொத்துவில் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மூவின மக்களுக்கும் சிறப்பான சேவையினை வழங்குமாறு கோரி பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக சமூக நலன் விரும்பிகளினால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இவ்வைத்தியசாலைக்கு அதிகமாக வெளிநோயாளர்கள் வருகை தருகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான பாணம, லகுகல, கோமாரி போன்ற கிராமங்களில் இருந்தும் மக்கள் இந்த வைத்தியசாலைக்கு மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ள வருகின்றனர்.

இதே போல் பொத்துவில் அறுகம்பைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளும் மருத்துவ சேவைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கே வருகின்றனர்.

இவர்களில் யாரேனும் ஒரு நோயாளிக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் விசேட மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு எந்தவொரு வைத்திய நிபுணர்களும் குறித்த வைத்தியசாலையில் இல்லை. அவ்வாறு விசேட வைத்தியர்களை நாட வேண்டுமாயின் சுமார் 45கிலோ மீட்டர் அல்லது 65 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டிய துர்ப்பகாக்கிய நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுவதாக கவயீர்ப்பில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறு அவசர மருத்துவ சேவைகளை பெற முடியாத காரணத்தினால் பல உயிர்களை இழந்திருக்கின்றோம் அன்மையில் கூட ஒரு இளைஞரை இழந்துள்ளோம் இன்னொரு இளைஞர் கிராம உத்தியோகத்தர் பொலன்னறுவை வைத்தியசாலையில் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் இவ்வாறான துர்ப்பாக்கிய நிலை தங்களுக்கு ஏற்பட்டு வருவதாக போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்ட இவ் வைத்தியசாலையில் பெரியளவான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது வைத்தியசாலை A தரமாகவும் உயர்த்தப்பட்டதாக சொல்கின்றார்கள்

ஆனால் தற்போது ஒரு வைத்திய அத்தியட்சகர் கூட எமக்கு இல்லை, பொது வைத்திய நிபுணர் இல்லை, சத்திரசிகிச்சை நிபுணர் இல்லை, ICU கட்டில் வசதிகளும் போதியளவு இங்கு இல்லை இவ்வாறு இங்கு இல்லாத நிபுணர்களையும் ஆளணிகளையும் நிரப்பி மருத்துவ சேவைகளை வழங்க முடியாத ஒரு வைத்தியசாலையாக பொத்துவில் ஆதார வைத்தியசாலை காணப்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக இன்றைய எமது ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், அதன் வேண்டுகோல் அடங்கிய மஹஜர் ஒன்றை கையளிப்பதற்கேனும் வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் என ஒருவரும் இருக்கவில்லை அதை ஏற்றெடுக்கவும் யாரும் இல்லை வைத்தியசாலையின் இந்த நிலை மிகவும் கவலைக்குறியதாக உள்ளது எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த எமது வைத்தியசாலையின் தேவைகளை நிவர்த்தி செய்து தராதபட்சத்தில் அடுத்த எமது போராட்டம் சுகாதார அமைச்சுக்கு முன்பாக இடம்பெறும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எனவே இதனை கருத்திற்கொண்டு குறித்த வைத்தியசாலைக்கு விசேட வைத்திய நிபுணர்களை வழங்குமாறு சுகாதார அமைச்சு மற்றும் உரிய அதிகாரிகளை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

அரசுக்கு ஆதரவு வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபின் இருந்தும் இந்த மக்களின் நீண்டகால கோரிக்கையை தீர்க்க முடியாத நிலையில் இருக்கின்றது. அரசு ஆதரவு வழங்கி செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் இந்த விடயத்தைல் அமைதிகாத்துக்கொண்டிருப்பது தொடர்பில் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். 



No comments